வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (31) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வவுனியா பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குற்றச்செயல்களுக்கு உதவிய 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வொன்று நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி வீட்டிற்கு தீவைத்து எரித்திருந்தனர்.
இதன்போது, வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதி உயிரிழந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த
02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டிற்கு தீ வைப்பதற்கும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதற்கும் முகமூடி அணிந்த குழுவொன்று வரும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதுடன், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.