அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் QR குறியீடு தொடர்பாக முடிவெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.
நிதியமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், QR குறியீட்டை நீக்க உத்தேசித்திருக்கிறோம். இன்றேல், எரிபொருள் வழங்கும் தொகை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் கூறியதாவது:
நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அதிக பிரச்சினைகளை எதிர்கொண்ட அமைச்சுக்களில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பிரதானமானது.
அன்று நீண்ட எரிபொருள் வரிசை இருந்தது. அந்த கடினமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற பின்னர், எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்கான சவாலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொறுப்பேற்றார். அந்த சமயம் நாட்டில் டொலர்கள் இருக்கவில்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட 28 எரிபொருள் விநியோகஸ்தர்களில் இருவர் மாத்திரமே இலங்கைக்கு எண்ணெய் வழங்க முன்வந்திருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் டொலர் கையிருப்பு வழமைக்கு திரும்ப ஆரம்பித்தது. மறுபுறம், அமைச்சர் காஞ்சனவின் நிர்வாகக் கொள்கையின் அடிப்படையில் QR குறியீட்டின் ஊடாக நாட்டில் கிடைக்கும் டொலர்களுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, எரிபொருள் வரிசைகள் முடிவடைய ஆரம்பித்தது. QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதற்கான ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் QR குறியீடு தொடர்பான முடிவு எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், QR குறியீட்டை நீக்க உத்தேசித்திருக்கிறோம். இன்றேல் எரிபொருள் வழங்கும் தொகை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.