அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கொக்கல்ல வடக்கு கடவர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இன்று காலை இனந்தெரியாத மூவர் வந்து வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் இந்த கும்பலை பார்த்து அலறியதும், இலக்கு வைக்கப்பட்ட நபரின் தந்தை வீட்டை விட்டு வெளியே வந்தார்.
இதன்போது சந்தேகநபர்கள் அந்த நபரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸாருக்கு எவ்வித குற்றச்சாட்டுகளும் கிடைக்கவில்லை எனவும், ஆனால் அந்த வீட்டில் மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த போது அந்த நபர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், மூன்றாவது சந்தேக நபர் கொன்னொருவையைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.