நிதி நிறுவனமொன்றை நடத்தி பெரும் தொகை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (19) குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
164,185,000 ரூபாவை சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் மோசடி செய்திருந்தனர். சட்ட மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை புதன்கிழமை (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெட்டபந்தி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக பிரதிவாதிகள் அறிவிப்பு
இதன்படி, குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக பிரதிவாதிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். இதனையடுத்து பிரதிவாதிகள் தலா 50 இலட்சம் ரூபா வீதம் மாதாந்த தவணைகளில் உரிய தொகையை செலுத்துவதற்கு நீதிமன்றில் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி, பிரதிவாதிகளின் முதல் தொகை இன்று செலுத்தப்படும் என, பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நுகேகொடை பிரதேசத்தில் சக்விதி கட்டுமான நிறுவனத்தை நடத்திச் சென்று அதன் வைப்பாக முன்வைக்கப்பட்டிருந்த 164,185,000 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.