பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அண்மைக் காலங்களில் பௌத்த மதகுமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நேற்று செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேள்வியெழுப்பப்ட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நாம் இன, மத பேதங்களால் பாரிய அழிவுகளை எதிர்கொண்ட நாட்டவராவோம்.
ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் பௌத்த மதகுமார்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிவரும் இரு மாதங்களுக்குள் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இது தொடர்பில் புத்த சாசன , மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன திஸாநாயக்க அறிவித்துள்ளார். இறுதி சட்ட மூலம் மகா சங்கத்தினரின் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு , அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்த சாசன அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என்றார்.