40 வருடங்களை கடந்த அனைத்து தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அல்லது வேறேனும் அரச நிறுவனத்தினால் இவ்வாறான கட்டடங்கள் தொடர்பில் ஆய்வு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவதானத்தை செலுத்தி, தொழில்நுட்ப அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்தார்.
எனவே, இவ்வாறான தொடர்மாடிகளின் பாதுகாப்பின்மை உறுதி செய்யப்பட்டால், அமைச்சருக்குள்ள அதிகாரங்களின்படி அவற்றைக் கையகப்படுத்தும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்பு, சிறிதம்ம மாவத்தை வீடமைப்பு, கம்கருபுர தொடர்மாடி குடியிருப்பு, மிஹிந்துபுர வீடமைப்பு, மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகிய கட்டடங்கள் தொடர்பிலான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.