மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு அளிக்கப்படும் டயாலிசிஸ் பிரிவின் செயற்பாடுகள் நேற்று முதல் முற்றாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்தியசாலையின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறுநீரக நோயாளிகளின் ரத்தத்தை வடிகட்ட நோயாளி மற்றும் வடிகட்டும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள “டயாலைசர் கிட்’ என்ற கருவிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் பணியை நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குறித்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் சிறுநீரக நோயாளிகளுடன் கிட்டத்தட்ட 200 பேர் டயாலிசிஸ் செய்து வருகின்றனர்.
தற்போது அந்த நோயாளிகள் அனைவரின் உயிரும் ஆபத்தில் உள்ளது. இந்த உபகரணங்களை இலங்கைக்கு வழங்கும் நிறுவனங்களின் விநியோகம் தடைப்படுவதால் பல வைத்தியசாலைகளில் இந்த உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் “டயாலிசர் கிட்” எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு மட்டுமே போதுமானது” என சுகாதாரத் துறைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குப் பொறுப்பான சுகாதாரத் திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து சிறுநீரக நோயாளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.