ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியமான கூட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 10 மணிக்கு வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் புதிய தலைமை உள்ளிட்ட ஏனைய பதவிநிலைகளுக்கான தெரிவுகள் இடம்பெறலாம் என்று அதன் பங்காளிக் கட்சிகளின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், கூட்டணிக்கான யாப்பும் அதன்போது இறுதி செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், குறித்த கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை முதலில் செல்வம் அடைக்கலநாதன் பெற்றுக்கொள்வதற்கும், பின்னர் கிரமமாக சுழற்சி முறையில் ஏனைய தலைவர்களுக்கு வழங்குவதற்கும் முன்மொழிவொன்று செய்யப்பட்டது.
எனினும், அந்த முன்மொழிவினை ஏற்றுக்கொள்வதற்கு அக்கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கட்சி விருப்பம் கொண்டிருக்கவில்லை.
குறிப்பாக, குறித்த கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தினை வழங்குவதை விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்.
அதன் பின்னரான நிலைமையில் புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு முதற்சுற்றில் தலைமைத்துவத்தினை வகிப்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப். தரப்பிலிருந்தும் சாதகமான சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது. எனினும், புளொட்டின் வசமுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் பதவியில் ஆர்.ராகவன் உள்ளார்.
ஆகவே, தலைவரும், செயலாளரும் ஒரே கட்சியில் இருப்பதை ஏனைய கட்சிகள் விரும்பவில்லை.
அதேநேரம், சித்தார்த்தனும் புளொட்டுக்குள் நடத்திய உள்ளகக் கலந்துரையாடல்களில் குறித்த கூட்டின் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இதனால், இன்றைய தினம் பெரும்பாலும் கூட்டுத்தலைமையுடன் கூட்டணி இயங்கும் என்ற முடிவே எடுக்கப்படவுள்ளது. அதேநேரம், கூட்டணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிநிலைகள் பங்காளிகளிடையே பகிரப்படவுள்ளது.
இதனையடுத்து கூட்டணியின் சார்பில் மாநாடு ஒன்றை நடத்துவது பற்றி ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.