ஸிம்பாப்வேயில் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை 2 பயிற்சிப் போட்டி வெற்றிகளுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிரமத்துக்கு மத்தியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுடனான போட்டியில் 198 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, ஒருநாள் கிரிக்கெட் உதவி அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்களும் மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியலும் அமெரிக்காவுடனான போட்டியில் இலங்கை அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்ட உதவின.
அத்துடன் சரித் அசலன்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோரும் ஆட்டம் இழக்காமல் அரைச் சதங்கள் குவித்து இலங்கை அணியைப் பலப்படுத்தியிருந்தனர்.
இந்த வெற்றியானது தகுதிகாண் சுற்றை இலங்கை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் என கருதப்படுகிறது.
இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்ட இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 392 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 25 ஓட்டங்களைப் பெற்றார்.
திமுத் கருணாரட்ன 15 பவுண்டறிகளுடன் 115 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 7 பவுண்டறிகள் 6 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களையும் குவித்தனர். அத்துடன் 2ஆவது விக்கெட்டில் 191 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
திமுத் கருணாரட்ன சுயமாக ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
சதீர சமரவிக்ரம (9), தனஞ்சய டி சில்வா (6) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
இந்நிலையில், ஜோடி சேர்ந்த சரித் அசலன்கவும் தசுன் ஷானக்கவும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 112 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
சரித் அசலன்க 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடனும் தசுன் ஷானக்க 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 61 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 194 ஓட்டங்களைப் பெற்றது.
மதீஷ பத்திரண ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கை தனது ஆரம்ப உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை திங்கட்கிழமை எதிர்த்தாடவுள்ளது.