கெஹலியவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் வாக்கு மூலம்!

நாட்டில் நிலவிய மருந்துப் பற்றாக்குறைக்கு மத்தியில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு, அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கியதாக முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 13 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் சாட்சியங்களை முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம இதனை குறிப்பிட்டுள்ளார்

குறிப்பிட்ட விசாரணை தொடர்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுவரை 13 அமைச்சரவை அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.

ரம்புக்வெல்லவின் மீது நம்பிக்கை கொண்டே, நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலைமையை கருத்திற்கொண்டு, குறித்த மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

மருந்து பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கத்தில், ரம்புக்வெல்ல பொய்யான தகவல்களை முன்வைக்கிறார் என்பதை அறிந்திருந்தால், அமைச்சரவைப் பத்திரத்தை தாங்கள் எதிர்த்திருப்போம் என அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

13ஆம் திகதி வரை விளக்கமறியல்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திரான் அலஸ் ஆகியோரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாக வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட பிரதி மன்றாடியார் நாயகம், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, வாக்குமூலம் வழங்குவதற்கு வேறொரு திகதியை கோரியுள்ளதாகவும் மன்றில் தெரிவித்துள்ளார்.

விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் அபேவிக்ரம, முதலாவது சந்தேகநபரான சுதத் ஜானக பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் தற்போது பிணையில் உள்ள சகல சந்தேக நபர்களையும் பெப்ரவரி 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.