தேர்தல் காலங்களில் சமூக வலைத்தள பாவனை தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

சமூக வலைத்தளங்களை தேர்தல் காலங்களில் முறையாக பாவிக்குமாறு கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலியுறுத்தியுள்ளார்.

அம்பாறையில், கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்த பொதுத் தேர்தலில் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.

போலி செய்திகள்
இதேவேளை பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகின்றது. இவற்றை நாம் கண்காணிக்கும் போது வேட்பாளர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரச்சாரங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான கானொளி பதிவுகள் போலி முகநூல் மற்றும் வட்சப் ஊடாகவும் பகிரப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.