தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை! 

எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 முறைப்பாடுகள் அவற்றில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுவரை பெறப்பட்ட 869 முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது