கேபிள் கார் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அம்புலுவாவ கேபிள் கார் வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையிடுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ராஜகிரியவில் அமைந்துள்ள எம்பர் எட்வென்ச்சர் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள நாட்டின் முதலாவது கேபிள் கார் திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனு மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய, எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, நாள் ஒன்றை கோரியிருந்தார்.

இதன்போது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி, சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில், கேபிள் கார் திட்டம் அமுல்படுத்தப்படும் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசம் எனவும் அதன் விடயங்களில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை எனவும்  சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை டிசம்பர் 2 ஆம் திகதி தாக்கல் செய்ய அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவை அன்றைய தினம் வரை நீடிப்பதாக உத்தரவிட்டது.

மனுதாரர் நிறுவனம் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, அனைத்து அரச நிறுவனங்களும் தேவையான அனுமதியை வழங்கியிருந்தும் கம்பளை பிரதேச செயலாளர் இந்த கேபிள் கார் திட்டத்தை நிர்மாணிக்கும் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தினை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, திட்டத்திற்கு இடையூறுகள் மற்றும் முறையற்ற தலையீடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

கம்பளை பிரதேச செயலாளர் தில்ருக்ஷி ஜயரத்ன, இலங்கை சுற்றுலா சபை மற்றும் முதலீட்டு சபை உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.