வெள்ளத்தை பார்வையிட சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்லை பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனிமுல்லை, கம்சபா வீதியைச் சேர்ந்த நிலான் சதுரங்க என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

படகு கவிழ்ந்து விபத்து
களனிமுல்லை பகுதியில் கட்டடப்பொருட்கள் கடையொன்றினை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் சமூக சேவகராகவும், களனிமுல்லை இராணுவ முகாமில் சிவில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக தொண்டாற்றியுள்ளார்.

உயிரிழந்த நபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக படகில் பயணித்த போதே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ​​8 வயது மகளை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு தந்தை கரை சேர்த்திருந்த நிலையில், தாயும் மரக்கிளையில் தொங்கியபடி கரைக்கு வந்துள்ளார்.

இதன்போது நீர்மட்டம் அதிகரித்து நிலான் சதுரங்க அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

உடனடியாக பொலிஸ் கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அழைத்து காணாமல்போனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று (13) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.