இலங்கையில் வீதியோர சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில்(sri lanka) அண்மையில் நடத்தப்பட்ட சமூக ஆய்வு அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் 15,000 முதல் 30,000 வீதியோர சிறுவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் என்பதும், அவர்களில் கணிசமானோர் பெரியோர் கவனிப்பின்றி தெருக்களில் அலைவதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு சூழ்நிலைக்கு பலியாகும் சிறுவர்கள்
யாசகம் எடுப்பது, குழந்தை விபச்சாரிகளாகப் பயன்படுத்தப்படுவது, மது மற்றும் போதைப்பொருள் பாவனை, போக்குவரத்துக்கு பயன்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளுக்கு அவர்கள் பலியாகி வருவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும், மத வழிபாட்டுத் தலங்களைச் சூழவுள்ள இடங்களிலும் இவ்வாறான வீதியோரக் குழந்தைகளைக் காணமுடியும் என வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுதவிர, வறுமை காரணமாகவோ, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளால் புறக்கணிக்கப்படும் சமூகப் பிரிவுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.இல்லையென்றால் பல்வேறு சமூக-பொருளாதார பிரச்னைகளால் சுகாதார சீர்கேடுகள் உருவாகலாம் என தொடர்புடைய ஆய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தோட்டப் புறங்களிலும், சில மதப் பிரிவுகளிலும், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இவ்வாறான புறக்கணிக்கப்பட்ட குழுக்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை அதிகாரிகள் வகுக்க வேண்டுமெனவும் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்