ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்பானது சற்று முன்னர் (20.09.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த குழு தமது விஜயத்தின் நோக்கத்தை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டதுடன், அமைதியான தேர்தலுக்கான பின்னணியை ஏற்படுத்தியமைக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கண்காணிக்கப்படும் தேர்தல் கால நடவடிக்கைகள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு முன்னதாக தெரிவித்திருந்தது.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் இடம்பெறும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினத்தில் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமாவது, வாக்களிப்பு, வாக்குகள் எண்ணப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது போன்றவற்றை குறுகிய கால கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.