புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படபோகின்றதா?

5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) அறிவித்துள்ளார்.

பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில், நேற்று காலை வினாத்தாளை தயாரித்து அதிகாரிகள் சபையுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் நகரம் மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபரும் ஆறு ஆசிரியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.