அரச மற்றும் தனியார் துறையினருக்கு சம்பளத்துடனான விடுமுறை!

அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பளம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்கினை அளிப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த தகவல் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காவிடின் அது அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) ஆணையாளர் நாயகம் நேற்று ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தொடர்ச்சியாக 4 மணிநேரம் தேவை என்பதால், அன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது