கைதாகி விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி பிரசாரம் செய்து வரும் தம்மை, நேற்று கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்து, பின்னர் விடுவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எமது செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கனகப்புரத்தில் நேற்று (13) தாம், தமது கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பொலிஸார், இடையூறை ஏற்படுத்தியதுடன் தம்மை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும் இடையில் 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் தம்மை நிறுத்தி தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர்,பொலிஸ் பொறுப்பதிகாரி அங்கு வந்து தேர்தலை புறக்கணிக்கக் கோருவது அரசியல் அமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் இது தொடர்பில் தாம் நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதில் குறித்த பிரசாரம் சட்டவிரோதம் என்று கூறப்பட்டால், அதனை தொடரமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.