இலங்கையில் வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை கனேடிய தமிழர் தேசிய அவை வரவேற்றுள்ளது.
அத்துடம் அதற்கான முழுமையான ஆதரவையும் கனேடிய தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடிய தமிழர் தேசிய அவை வெளியட்டுள்ள ஊடக அறிக்கையில் ,தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
சிவில் சமூகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், கிராமிய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பன இணைந்து “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” என்ற ஆற்றலுள்ள அணியாக ஒன்றிணைந்துள்ளன.
இந்த ஒன்றிணைவின் ஊடாகத் தமிழ்ப் பொது வேட்பாளர் அறிவிப்பும், வேட்பாளர் அறிக்கையையும் வெளிவந்துள்ளன.
இந்த ஒற்றுமையானது, தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதற்கு ஒரு புதிய நம்பிக்கையையும் வலுவான அடித்தளத்தையும் தருகிறது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவு செய்வதில் அக்கறை காட்டாது, தமிழ் மக்களை அடிபணியச் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அதிகாரத்திற்காகப் போட்டி போட்டு வருகின்றனர்.
ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறியதிலிருந்து கடந்த 76 ஆண்டுகளாக இந்நிலைமை தொடர்கிறது.
ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பையும் ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.
எனவே, தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பயன்படுத்தி, தமது நிலைப்பாடு குறித்து அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தியை அறிவிக்க வேண்டும். தமிழ்த் தேசியப் பொது வேட்பாளர் பின்வரும் முக்கிய விடயங்கள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசம். மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகளின் இனவழிப்புகளால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசுகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் தண்டனை வழங்கும் பொறிமுறை, தமிழின அழிப்புக்கான பரிகார நீதி என்பவற்றைத் தமிழ் மக்கள் கோருகின்றனர்.
தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் அறிக்கைக்கு வாக்களிக்கிறீர்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதன் ஊடாக ஒரு தெளிவான செய்தியை கொடுக்கின்றீர்கள். தமிழ் மக்களாக ஒன்றிணைந்து எமது மக்களின் நியாயமான வேணவாக்களை நிறைவேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாட்டைத் தொடங்குவோம் எனவும் அந்த அறிக்கையில் கனேடிய தமிழர் தேசிய அவை குறிப்பிட்டுள்ளது.