தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி, இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை சுதந்திர வர்த்தக சங்கத்தின் தோட்ட செயலாளர் பி. சந்திரசேன இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் 1,700 ரூபாய் பற்றி கலந்துரையாடினோம். அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவை முன்வைத்தோம். மேலதிகமாக, 350 ரூபாய்க்கு உற்பத்தி ஊக்கத்தொகையை கோரினோம்.”
“இந்த உற்பத்தி ஊக்கத்தொகை குறித்து தோட்ட உரிமையாளர்கள் கூறுகையில், அந்த தொகையை வழங்க வேண்டுமானால் 7 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். தோட்ட தொழிலாளிக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் நாங்கள் உடன்படவில்லை.
“அதன் படி, இன்றைய கலந்துரையாடலில், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும், மேலதிகமாக ஒரு கிலோ இலைக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்க தோட்ட உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.