பிரபல தனியார் வைத்தியசாலைக்கு பாடம் கற்ப்பித்த சிறுவனின் தந்தை!

மாத்தறையில் இயங்கிவரும் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர்களின் அசமந்த போக்கால் சிகிச்சை பெற சென்ற சிறுவன் ஒருவருக்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை முகநூலில் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

சிறுவனின் கையில் ஏற்பட்ட முறிவிற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரின் தந்தை சிறுவனை அழைத்துகொண்டு குறித்த வைத்தியசாலையில் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க கட்டணமாக 4,000 ரூபாவும் தந்தையால் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுவனுடன் சிகிச்சை அளிக்கும் பகுதியில் காத்திருக்குமாறு வைத்தியசாலை ஊழியர்களால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், 4 மணித்தியாலத்திற்கும் மேலாக சிறுவனை பார்வையிட வைத்தியர் எவரும் வராததால் சிறுவனின் தந்தை கோபமடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுவனின் தந்தை அனுமதிக் கட்டணமாக செலுத்தப்பட்ட 4,000 ரூபாவையும் ‘X-Ray’ அறிக்கையையும் தருமாறு வைத்தியசாலை ஊழியர்களிடம் கேட்டு அதனை நேரலையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கு இவ்வாறு 2வது முறையாக இதே வைத்தியசாலையில் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.