சுற்றுலா ஹோட்டல்களை அடமானமாக வைத்து வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த தவறியதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள 25 முக்கிய சுற்றுலா விடுதிகள் நிதி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் பல சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா விடுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக அநுராதபுரம் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டெமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸின் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, முழு நாட்டின் சுற்றுலா வணிகமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவில்லை, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால், இந்த நாட்டில் சுற்றுலா வணிகம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால், கடன் வாங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
கடன் பெற்ற ஹோட்டல் உரிமையாளர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தற்போது, தனியார் வங்கிகளில் எங்கள் ஹோட்டல்களை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளோம்.
வங்கி கடன்
கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இதுவரை அனுராதபுரத்தில் உள்ள எனது 2 முக்கிய ஹோட்டல்கள் வங்கியால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட அந்த ஹோட்டல்களை, வங்கிகள் முறையாக பராமரிக்கவில்லை. ஏலம் விட நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது, அந்த ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள், தோட்டங்கள், கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன.
இதன் காரணமாக 7,8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இந்த ஹோட்டல்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.
கடனில் இருந்து விடுபட முடியாது. எனவே, இவ்விடயத்தில் பொறுப்பானவர்கள் தலையிட்டு அனுராதபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என டெமியன் பெர்னாண்டோ கேட்டுக் கொண்டார்.