வயநாடு (Wayanad) நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிப்பதுடன் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிக்கையில், “இது ஒரு பயங்கரமான சோகம். நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம்.
வீடுகளின் எண்ணிக்கை
இன்று மாவட்ட ஆட்சியாளர் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். எதிர்பார்க்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எங்களிடம் கூறினர்.
கேரளாவில் இதுபோன்ற ஒரு சோகம் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன். வித்தியாசமான முறையிலேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதல்வரிடமும் வலியுறுத்த உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம்.
கேரள அரசு
இப்போதைக்கு நமது முன்னுரிமை, தேடுதல்தான். இன்னும் உயிரோடு யாரேனும் இருக்கிறார்களா என்பதை தீவிரமாக தேட வேண்டும்.
அதேபோல், முகாம்களில் இருப்பவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும்.
மறுவாழ்வு அளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். பாதிக்கப்பட்ட மக்களில் பலர், மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தனர்.
எனவே, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கே செல்ல வலியுறுத்தக்கூடாது. இது குறித்தும் கேரள அரசிடம் (Kerala Government) வலியுறுத்த உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.