தக்காளியில் துவையல் வெறும் பத்து நிமிடத்தில்!

பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லி அல்லது தோசையாகத் தான் இருக்கும். அதற்கு தொட்டுக்க தினசரி சட்னி சாம்பார் செய்வது வழக்கம்.

கொஞ்சம் வித்தியாசமான சுவையில் தக்காளியை வைத்து துவையல் செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் வெறும் பத்தே நிமிடத்தில் தக்காளி துவையல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மல்லி விதைகள் – 1 மேசைக்கரண்டி

சீரகம் – 1/2 தே.கரண்டி

வெந்தயம் – 1/4 தே.கரண்டி

வரமிளகாய் – 2

எண்ணெய் – 2 தே.கரண்டி

தக்காளி – 3 (நறுக்கியது)

பூண்டு – 10 பல்

இஞ்சி – 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

புளி – சிறிய துண்டு

கொத்தமல்லி – சிறிது

உப்பு – சுவைக்கேற்ப

வெல்லம் – 1/4 தே.கரண்டி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதை, வெந்தயம், சீரகம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு தட்டிற்கு மாற்றி சற்று குளிரவிட வேண்டும்.

பின்பு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து , எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிய பின்னர் அடுப்பபை அணைத்துவிட வேண்டும்.

பின்னர் அதனுடன் புளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, அந்த சூட்டிலேயே வதக்கி எடுத்து குளிரவிட வேண்டும்.

அதன் பின்பு வறுத்த பொருட்களை சேர்த்து மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து, நீர் சேர்க்காமல், தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து கொகொரவென்று அரைத்து எடுத்தால் அசத்தல் சுவையில் தக்காளி துவையல் தயார்.