பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூவரின் பெயர் பரிந்துரை!

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு அமைய இந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களில் ஒருவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் துறையில் சேவை மூப்பு

பொலிஸ் திணைக்களத்தின் சேவை மூப்பு அடிப்படையில் இரண்டாம் இடத்தை வகித்து வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு கடந்த வாரம் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

இதன்படி, நாட்டின் பொலிஸ் துறையில் சேவை மூப்பு கூடிய அதிகாரியாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சேவை மூப்பு அடிப்படையில் இரண்டாம் இடத்தை வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும், மூன்றாம் இடத்தை சபரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்னவும் வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.