இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை நம்பி, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் இனியும் பணம் கொடுப்பீர்களானால் அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என்று சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், காலத்திற்கு ஏற்ப புதிய இளைய அரசியல்வாதியை உருவாக்குவோம்.
முதிர்ந்த அரசியல்வாதிகள்
அப்படி ஒருவரை தேடிப்பிடித்தோமெனில், அவரது சொத்து விபரங்கள், வங்கி விபரங்கள் உள்ளிட்டவை அவரது பின்புலம் போன்றவற்றை தெளிவாக ஆராய்ந்து அரசியலுக்குள் நாங்கள் அனுப்பி வைப்போம்.
அதன் பின்னர் இப்போதிருக்கக் கூடிய வயது முதிர்ந்த அரசியல்வாதிகளுக்கு ஓய்வு கொடுத்து அவர்களை நாங்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்போம். இப்போதிருக்கக் கூடிய அரசியல்வாதிகளுக்கு நான் வாக்கு செலுத்தவும் விரும்பவில்லை, இவர்களுக்கு நாங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் இந்த இனத்திற்கு நாங்கள் செய்கின்ற துரோகம்.
ஆனால், “அந்த ஒருவர் இருந்திருந்தால் நான் நிச்சயம் வாக்களித்திருப்பேன். அந்த ஒருவர் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் காற்றோடு காற்றாக கலந்து போய்விட்டார்”.
அவரைத் தவிர வேறு எவர் தொடர்பிலும் எனக்கு விருப்பமில்லை. அதிக சட்டம் தெரிந்தவர் என்று நாங்கள் சுமந்திரனை நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அவர்கள் வந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.
இப்போது தீர்வு கிடைக்கும், அப்போது தீர்வு கிடைக்கும் என்று காலம்காலமாக சொல்லிக் கொண்டிருப்பதை தவிர்த்து வேறு ஒன்றும் இவர்கள் எல்லாம் செய்து விடவில்லை. மக்களே இவற்றை தீர்மானிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.