ரணிலின் பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால உத்தரவு
அடுத்த அதிபர் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு அதிபர் வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.