பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் பணத்தைப் பயன்படுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிங்கள திரைப்பட நடிகையான பியுமி ஹன்சமாலி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த தகவலின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
மேலும், எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை அடக்கி மக்கள் பாதுகாக்கும் வகையில் நீதி நடவடிக்கையை ஜூலை 04 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த மாதம் 19ஆம் திகதி(19.06.2024)கொழும்பு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சஞ்சய் மஹவத்த தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இதற்கமைய 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தபட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இம்மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு பியூமி ஹன்சமாலி முன்னிலையாகினார்.
20 வங்கி கணக்குகள்
இதன் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நான் மிகவும் நேர்மையான முறையில் இந்த பணத்தை சம்பாதித்தேன். போதைப்பொருள் விற்பனையோ அல்லது சட்டவிரோதமான முறையிலோ இந்த பணத்தை நான் சம்பாதிக்கவில்லை.
தனி ஒரு பெண்ணாக எனது தொழிலை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எனக்கு 20 வங்கி கணக்குகள் இருப்பதாகக் கூறப்படும் அனைத்து தகவலும் போலியானது. என்னிடம் 9 வங்கி கணக்குகள் மாத்திரமே உள்ளன.
அவற்றை எனது தொழில் நடவடிக்கைகளுக்காக நான் பயன்படுத்தி வருகின்றேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தான் எந்தவித அச்சமுமின்றி நான் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.