பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானிக்கு தடை உத்தரவு!

சிறிலங்கா வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

வில்பத்துவில் (Wilpattu) உள்ள விடத்தல்தீவு (Vidataltivu) இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை இறால் பண்ணை திட்டத்திற்காக ஒதுக்கி குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

விடத்தல்தீவு இயற்கைக் காப்பகம்

இந்நிலையிலேயே குறித்த வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததுடன் மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடத்தல்தீவு இயற்கைக் காப்பகத்தின் ஒரு பகுதியை மீன்வளர்ப்பு கைத்தொழில் பூங்கா அமைப்பதற்கான வர்த்தமானி நீக்கம் செய்து மே மாதம் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டது.

கடல் மீன் வளர்ப்பு தொழில் பூங்கா, கடல் மீன்கள், நண்டுகள் மற்றும் அயல்நாட்டு வகை இறால் உள்ளிட்ட பல்வேறு இனங்களின் விவசாயத்திற்காக பொது தனியார் கூட்டுறவில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம்
இதேவேளை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ள வர்த்தமானியின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி இனி விடத்தல்தீவு இயற்கைக் காப்பகத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அரசின் முடிவை எதிர்த்து சுற்றுச்சூழல் நீதி மையம் (CEJ) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

வங்காலை சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள நாட்டின் மூன்றாவது பெரிய கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியான விடத்தல்தீவு இயற்கைக் காப்பகம் 1956/13 வர்த்தமானி மூலம் மார்ச் 1, 2016 இல் 29,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வடக்கு மாகாணத்தின் மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டின் (SEA) மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது என அடையாளம் காணப்பட்டது.