பல்கலைக்கழக மாணவனை தாக்கிய காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிறைத்தண்டனை!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட 4 பேரை கடுமையாக தாக்கி கைது செய்த காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம பொலிஸ்துறையின் முன்னாள் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக எரஹிவ மாத்தறை, மாகாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி சாமர தென்னகோன், குறித்த காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

அவர்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில் ஒன்றில் மட்டுமே அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கு 2008 இல் தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புபாத் தேஷபந்து மற்றும் சார்ஜன்ட் குலதுங்க ஆகியோர் 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர்.

அரசாங்கத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நெரஞ்சன் பீரிஸும், சந்தேகநபர்கள் தரப்பில் வழக்கறிஞர் ராசிக் சரூக்கும் ஆஜராகினர்.