சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து இந்த வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திரவினால் (Montegue Sarachchandra) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.
பதவி விலகல்
இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன, கடந்த மே 12 அன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அதேநேரம், சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) கட்சியின் புதிய தலைவராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.