இன்றைய காலக்கட்டத்தில் நூறு வயது வரை வாழவில்லை என்றாலும் குறைந்தது 80 வயது வரையாவது வாழ வேண்டும் என்பது பலரது ஆசை. அவ்வாறு உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்றால் தினமும் ஒரு கீரை சாப்பிடுவது அவசியம்.
நாம் தினம் ஒரு வகை கீரை சாப்பிடும் போது எந்த நோயும் உங்களை தாக்காது. அவ்வாறு எளிதில் கிடைக்கக் கூடிய சிலவகை கீரைகளின் நன்மைகளையும், சத்துக்களையும் இங்கே காண்போம்.
அரைக் கீரை
அரைக் கீரையில் வைட்டமின் ஏ,சி இரண்டும் அதிக அளவில் இருக்கின்றன. புரதச் சத்து, கால்சியம், நார்ச் சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன. இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும். தேக பலமும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கி குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும்.
பசலைக் கீரை
இரும்புச் சத்து நிறைந்த இச்சாறு எளிதில் ஜீரணம் ஆகும். ஹீமோகுளோபினைக் கூட்டும். அமிலத்தன்மை குறைகிறது. மூல வியாதி, உடல் சூடு, மூலச்சூடு, மலக்கட்டு நீங்கும். மூத்திரக்கடுப்பு, சிறுநீர் வியாதிகள் விலகும். கண்கள் சத்துக்கள் பெறுகின்றன. உடல் பருமன், தொப்பையைக் குறைக்கின்றன. உடல் பளபளப்புக்கு பசலைக்கீரை சாறு பருகலாம்
மணத்தக்காளிக் கீரை
மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும். வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம். இதயத்திற்கு வலிமை ஏற்றும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும். கண்பார்வையும் தெளிவு பெறும்.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையில் விட்டமின், புரோட்டின், கால்சியம், மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்பு போன்ற முக்கிய சத்துக்கள் நிரம்பப் பெற்றிருக்கின்றன. முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.
வெந்தயக் கீரை
வெந்தய கீரை மலச்சிக்கலை போக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இந்த கீரையில நார் சத்து, இரும்புச் சத்து,கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. வெந்தய கீரை தோல் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது. இது இரத்தத்தை பெருக்கி உடலை வலிமையாக்கும்.
வயிற்றுப் புண், வாய்வு தொல்லை ஆகியவற்றை போக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நன்மைகளைத் தரும்