நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேத பட்டதாரிகளின் தொழிற்பயிற்சிகள் தாமதமாகி வந்தன.
இதன்படி 207 ஆயுர்வேதம், சித்தா, யுனானி பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 67,500 ரூபாயுடன் கடந்த 3ஆம் திகதி முதல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 153 பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆகஸ்ட் 12ஆம் திகதிக்குள் தொடங்கப்படும். இதன்படி 418 பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. அதேவேளை, சுதேச வைத்திய அமைச்சும் ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து தற்போது நாட்டில் பாரம்பரிய வைத்தியர்களின் பதிவேட்டை விரிவுபடுத்தி வருகின்றன.
இதன்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்