முதன் முறையாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காகங்கள்!

கேரளா மாநிலத்தில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறவை காய்ச்சல் தாக்கம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 59 வயது நபர் மெக்சிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இதனையடுத்து பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது. பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

கால்நடை மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் விலங்கு நோய்களுக்கான மாநில நிறுவனம் மற்றும் பறவை நோய் கண்டறியும் ஆய்வகத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பறவை காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் தான் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக இறந்த காகங்கள்
இங்கு சில நாட்களுக்கு முன்பு காகங்கள் மொத்தமாக இறந்துள்ளன. தொடர்ந்து அந்த காகங்களின் உடல் மாதிரியை பரிசோதனைக்காக போபால் அனுப்பியதாகவும், அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆலப்புழா மாவட்டத்தின் தென் பகுதிகளில் வாத்துகளுக்கு மட்டுமே பரவி வந்த பறவைக் காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோழி, காகங்களுக்கு பரவி இருப்பதாக கூறப்படுகின்றது.

அதோடு , மாவட்டத்தின் வடக்கு பகுதிகளுக்கும் இது பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் ஜமுனா வர்கீஸ் கூறுகையில்,

பறவைக் காய்ச்சலின் தோற்றம் தற்போது வரை தெரியவில்லை. இது புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா? அல்லது பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்த பறவைகளால் வந்ததா? என்று தெரியவில்லை.

இருப்பினும் இது மனிதர்களுக்கு பரவவில்லை என்றார். இந்நிலையில் கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பொதுமக்களும், விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காகங்களுக்கு பறவைக்காச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை பரப்ரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.