முல்லைத்தீவில் (Mullaitivu) இந்த வாரத்தின் ஆரம்ப நாட்கள் தொடக்கம் திடீர் வீதிச் சோதனைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப் படையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையாகவே இது இருப்பதாக மக்கள் தங்கள் அவதானங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
வீதிகளில் வெவ்வேறு இடங்களில் திடீரென தோன்றும் இந்த வீதிச் சோதனைக் குழுவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதன் ஆவணங்களை சரி பார்த்துக் கொள்கின்றனர் என சோதனையினை எதிர்கொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் செயற்பாடு
திட்டமிட்ட குற்றச் செயலோடு தொடர்புடைய யாரேனும் நபர்களை இனங்கண்டு கைது செய்து கொள்வதற்கான சோதனையாக இது இருக்கலாம் என சோதனை நடவடிக்கை தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அலுவலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை முதல் முல்லைத்தீவு நகரை அண்டிய இடங்களில் மேற்கொள்ளப்படும் வீதிச் சோதனைகள் தொடர்பில் அலுவலகங்களுக்கு பயணப்படும் அலுவலர்களுடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் மேற்படி தன் அபிப்பிராயத்தினை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான ஒரு செயற்பாடாக அல்லது அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டின் போதைப் பொருள் கடத்தல்காரர்களை அச்சமூட்டும் செயற்பாடாக கூட இது இருக்கலாம் என மற்றொரு அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையிலான சோதனை நடவடிக்கையாக இது இருப்பின் இன்றைய சூழலில் இது வரவேற்கத்தக்க ஒரு செயற்பாடாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.