பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஒழுக்காற்று விடயத்தில் பல்வேறு முறைகேடுகளை மேற்கொள்ளும் பொலிஸ் (Police) உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில், பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

இந்தநிலையில் ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பொலிஸ் திணைக்களத்தினுள் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கு மீறல்கள்
அதிகாரிகளின் ஒழுக்கம் குறித்து வேறு எந்த அரசு நிறுவனத்தையும் விட திணைக்களம் அதிக அக்கறை கொண்டுள்ளது. எனவே பொலிஸ் அதிகாரிகளால் சிறிய ஒழுங்கு மீறல்கள் நடந்தாலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கையில் பொலிஸாருக்கு எதிராக மொத்தம் 2,448 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாரின் செயலற்ற தன்மைக்காக 810 முறைப்பாடுகளும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக 563 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரபட்ச செயற்பாடு தொடர்பில் 450 முறைப்பாடுகளும், லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 112 முறைப்பாடுகளும், பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கியதற்காக 93 முறைப்பாடுகளும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 55 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சட்டவிரோத காவல் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.