கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது சூட்கேஸில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.
அவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயது உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால், குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.