நாட்டு மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

இன்புளூயன்சா

இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இன்புளூயன்சா A முதன்மையானது. இருப்பினும், இன்புளூயன்சா B யும் பரவலாக உள்ளது.

இது தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவதே சிறந்தது.

இன்புளூயன்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.