கோவெக்சின் தடுப்பூசி குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததாகவும் சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

அவை விசாரணைக்கு வந்தபோது, “கொவிஷீல்டு  தடுப்பூசியால்  டி.டி.எஸ் எனப்படும் இரத்தம் உறைவு மற்றும் இரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவு மிக மிக அரிதாக ஏற்படும்” என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திய அனைவரிடமும் இச்செய்தி பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.

மேலும், ‘இந்தியாவில் கொவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வு செய்யக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவெக்சின்’ தடுப்பூசி குறித்தும் பலருக்கு சந்தேகம் கிளப்பியது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான கோவெக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது அறிக்கையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், “பலமுறை சோதனை செய்த பிறகே கோவெக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆகவே, இரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மக்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. எனவே, கோவெக்சின் எவ்வித எதிர்மறையான பாதிப்புகளையும் கொடுக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி கோவெக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெருமூச்சை அளித்துள்ளது.