பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) இரவு தெஹிவளை பாமங்கடை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 02 கிலோ 129 கிராம் கொக்கெய்ன், 22 கிராம் மென்டி, 08 கிராம் குஷ் மற்றும் 03 கிராம் ஹேஷ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் வாடகை அடிப்படையில் பெற்ற பாமன்கடை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் துபாயில் இருந்து வழிநடத்தப்பட்டதாக மேலதிக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திட்டமிட்ட குற்றவாளிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 23 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 12 பேர் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் தொடர்புகளை பேணி குற்றச்செயல்களுக்கு ஆதரவாக செயற்பட்ட மேலும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் இருந்து நேற்று (02) வரை 804 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.