நாட்டில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கான செய்தி!

நாட்டில் ஒவ்வொருவரும் அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுவது சாதாரணமான விடயமாகும்.

எனினும் அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் பின்பற்றப்படும் சில நடைமுறைகள் பலருக்கு தெரிவதில்லை.

இதன்காரணமாக சிலர் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைமைகளும் உள்ளன.

அதிலும் திருமணமானவர்கள், குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் உள்ளவர்கள் பலர் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைமைகள் உள்ளன.

புதிதாக திருமணமானவர்களுக்கான தகவல்

அந்த வகையில் பார்க்கும் போது இலங்கையில் புதிதாக திருமணமானவர்கள் தாம் வசிக்கப் போகும் பிரதேசத்தின் MOH இல் பதிவு செய்வது கட்டாயமாகும்.

இதன்மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் தொடர்ந்து 3 மாதங்கள் போலிக் அமிலம் வழங்கப்படும்.

இது கட்டாய நடைமுறையாக பார்க்கப்படுகிறது. அத்துடன் கருவுற்றவர்கள் இது தொடர்பில் இரண்டு மாதம் பூர்த்தியாவதற்குள் தாம் வசிக்கும் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தருக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.

இதன்போது குடும்ப நல உத்தியோகத்தரால் கர்ப்பிணி தாய்மாருக்கு OGTT உள்ளிட்ட சில இரத்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். OGTT என்பது கர்ப்பிணித்தாய்மார்களின் நீரிழிவு அளவினை பார்ப்பதற்கான பரிசோதனையாகும்.

இதற்கு முதல் நாள் இரவு 10 மணியுடன் ஆகாரம் எதுவும் உண்ணாது இருத்தல் அவசியமாகும். மறுநாள் காலை இரத்த பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

முதல் தடவை இரத்தம் எடுத்த பின்னர் 75g அளவுள்ள குளுக்கோஸ் ஒரு கோப்பை தண்ணீரில் கரைக்கப்பட்டு வழங்கப்படும். இதனை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் இரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் மீண்டும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இரத்த பரிசோதனை செய்யப்படும்.

அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் பற்கள் தொடர்பான பரிசோதனை செய்வதும் கட்டாயமாகும். அதேவேளை இரத்த வகை என்ன என்பதை அறிந்திருப்பதும் கட்டாயமாகும்.

மாதாந்த வைத்திய பரிசோதனை
இதனை தொடர்ந்து மாதாந்தம் கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்த வைத்திய பரிசோதனைக்கு அழைக்கப்படுவதுடன், கணவன் மற்றும் மனைவிக்கு கர்ப்ப காலத்தில் மூன்று வகுப்புக்கள் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்ப்பிணிகள் தூரப் பிரயாணங்களில் ஏதேனும் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டால் வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதுடன், குடும்ப நல உத்தியோகத்தரால் வழங்கப்படும் அட்டைகள், கிளினிக் கொப்பிகள் மற்றும் மருந்துகள் என்பவற்றை உடன் எடுத்துச் செல்லுதல் அத்தியாவசியமாகும்.