கனடாவில் நிராகரிக்கப்படும் ஏதிலி அந்தஸ்து!

கனடாவில் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்காக கனடடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கனடாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது.

மாணவர் வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருக்கும் நோக்கில் இவ்வாறு ஏதிலி அந்தஸ்து கோரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 46736 பேர் கனடாவில் ஏதிலிஸ் அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 62 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாதிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை துரிதப்படுத்தவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரிகளை விரைவில் நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்காக தற்போதைய குடிவரவு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலனை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது மக்களின் உரிமைகளை பாதிக்கும் என குடிவரவு மற்றும் ஏதிலிகள் சட்டத்தரணியான சான்டால் டெஸ்லோக்ஸ் தெரிவித்துள்ளார்.