இலங்கையின் அஞ்சல் திணைக்களத்தை முன்னிலைப்படுத்தி பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் அபகரிக்கும் மோசடி அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிதி மோசடி தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள முக்கியஸ்தர்களை கண்டுபிடிக்கும் வகையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த மோசடி, கைபேசி உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் பொதுவான குறுஞ்செய்தி (sms) வடிவில் உள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் “செலுத்தப்படாத சுங்கக் கட்டணம்” அல்லது “தவறான விநியோக முகவரி” என்று தெரிவிக்கப்படும் செய்தியை கிளிக் செய்யும் போது, அரசாங்கத்தின் அஞ்சல் துறையின் மாதிரியை கொண்ட இணையதளத்திற்கு திருப்பிவிடப்படுகிறது.
பின்னர் அவர்கள் தனிப்பட்ட மற்றும் கடன் அட்டை அல்லது செலவு அட்டை விபரங்களை உள்ளீடு செய்து 99 ரூபாயை செலுத்துமாறு கோரப்படுகிறது.
60 முறைப்பாடுகள்
இந்தச் செய்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களில் பொதிகள், தேசிய அடையாள அட்டைகள் அல்லது அஞ்சல் அல்லது காவல்துறை அனுமதி அறிக்கைகள்,விநியோகங்களை எதிர்பார்த்த பெரும்பாலானோர், தமது விபரங்களை உள்ளீடு செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் தமது வங்கிக் கணக்குகளில் இருந்து கணிசமான தொகையை இழந்துள்ளனர் என்று சிசிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மோசடியின் மூலம் பொதுமகன் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து 216,000 ரூபாய் அறிவிடப்பட்டுள்ளது.
மாணவர் ஒருவர் அடையாள அட்டை நிமித்தம், இந்த மோசடியில் சிக்கி,தமது தாயின் 90ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்த மோசடிகள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை வரை. சிசிஐடிக்கு சுமார் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் அஞ்சல் திணைக்களம், இதுபோன் கொடுப்பனவுகளை கோரவில்லை என பிரதி அஞ்சல் மா அதிபர் துசித ஹ_லங்கமுவ வலியுறுத்தியுள்ளார்.