ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 41 அரச நிறுவனங்கள் கடந்த வருடம் (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை 58.6 பில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01 மற்றும் 05 வருடங்களுக்கு இடையில் இந்த அரச நிறுவனங்களால் செலுத்தப்படாத சுங்க வரித் தொகை 1.61 பில்லியன் ரூபாவாகும்.
5 முதல் 15 வருடங்களுக்கு இடையில் 56.99 பில்லியன் ரூபா சுங்க வரிப் பணமாக ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி செலுத்த தவறியுள்ள அரச நிறுவனங்கள்
இதன்படி, கைத்தொழில் மற்றும் வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி, பொருளாதார அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், மதம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கள் சுங்க வரி செலுத்த தவறியுள்ளன.
மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, துறைமுகங்கள், தேசத்தை கட்டியெழுப்புதல், கடற்றொழில், விளையாட்டு, மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்சார் மற்றும் கைத்தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து, சமூக சேவைகள், வெகுஜன ஊடகம், விவசாயம், கூட்டுறவு, நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகள் வரி செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.
இலங்கை இராணுவம், நிதியமைச்சு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியனவும் சுங்க வரி செலுத்த தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.