நாட்டின் தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (02-04-2024) நடைபெற்ற ஜனாதிபதி ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு, வர்தமானியில் அறிவிப்பதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.