இலங்கையின் (Sri Lanka) 12 பில்லியன் அமெரிக்க (America) டொலர் இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் (London) கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பத்திரப்பதிவுதாரர்களுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல் திருப்பிச் செலுத்தாதுள்ள வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில் இறையாண்மை பத்திரதாரர்களுடன் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம்
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு பணம் செலுத்துவதை ஒத்திவைத்து, 2028ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து 2042 வரை கடன்களை செலுத்துவதற்கான திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கடன் வழங்குபவர்களை இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளதாக நிதியமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, இலங்கையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தவும், சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள மற்ற கடன் வழங்குநர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணி நிதி நிவாரணத்தில் இலங்கைக்கு உதவவும் தொடர்ந்து ஆதரவளிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக் கடன்
இலங்கை முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக 2022ஆம் ஆண்டு ஆரம்பமாகி இரண்டு ஆண்டுகளுக்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சேவையை நீட்டிக்க சீன வங்கி ஒப்புக்கொண்டது.
இதன்படி, ஏப்ரல் 2024 முதல் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஆரம்பிக்குமாறு சீன அதிகாரிகள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்பிறகு, சில நிவாரணங்களை நீடிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, 2023 டிசம்பர் நிலவரப்படி, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பங்கு 37.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இருதரப்புக் கடன் 10.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பலதரப்புக் கடன் 10.84 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வர்த்தகக் கடன்கள் 14.74 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.