வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது. இதன்போது போராட்டக்காரர்கள் கூறுகையில்,
குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதி கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.
எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன. எனவே, குற்றம் இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும்.
அதுவரை நாம் போராடிக்கொண்டே இருப்போம் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம்’, ‘சர்வதேச விசாரணையே எமக்கு தேவை’, ’12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.