காசாவிற்கு உதவிப் பொருட்கள் வழங்க மேலும் பல எல்லைகளை திறக்க வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்க்கு எதிரான போர் என்ற பெயரில் காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்வதாக ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா குற்றம் சாட்டியது.
மனிதாபிமான உதவிகள் தடையற்ற ஏற்பாடு
எனினும் அதனை மறுத்த இஸ்ரேல் ராணுவம், எங்களது நோக்கம் ஹமாஸ்தான். எங்களை பாதுகாப்பதற்காகவே ராணுவ நடவடிக்கை எனத் தெரிவித்தது. இந்த நிலையில் காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
எல்லை வழியாக உணவு பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை என தென்ஆப்பிரிக்கா மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.
இந்த நிலையில் காசாவுக்கு உணவுகள், தண்ணீர், எரிபொருள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தடையற்ற ஏற்பாடு அடிப்படையில் எந்தவிதமான தாமதம் இல்லாத வகையில் கிடைக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன மக்கள் பாதிக்கும் வகையில் இஸ்ரேல் எந்தவிதமான ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் திகதி திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்திய தாக்குதலில் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.