வடக்கில் வீடற்றவர்களுக்கு இலவச வீடு!

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழு கூட்டமானது கடற்றொழில் அமைச்சரும் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கின் ஆளுநரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான திருமதி சார்ள்ஸின் பிரசன்னத்துடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குழு கூட்டம்

யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.

மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்

சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.

மேலும், குறித்த குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண அவைத் தலைவர் கே.வி.சிவஞானம், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.